செய்திகள்
ரெயிலில் பயணம் செய்த வாலிபர் மூச்சுத்திணறி பலி- கொரோனா பீதியில் சக பயணிகள் அச்சம்
ரெயிலில் பயணம் செய்த வாலிபர் மூச்சுத்திணறி இறந்தார். இதனால் கொரோனா பீதியில் சக பயணிகள் அச்சம் அடைந்தனர்.
ஈரோடு:
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ் (வயது 23). இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
கேரளாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், சதீஷ் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். இந்த ரெயில் நேற்று அதிகாலை ஈரோடு ரெயில் நிலையம் வந்தது.
அப்போது சதீஷ் மூச்சு விட சிரமப்படுவதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு சக பயணிகள் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ரெயில்வே டாக்டர் வரவழைக்கப்பட்டு, சதீசை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் சதீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் சதீஷ் கொரோனா தொற்றினால் இறந்திருக்க கூடும் என்ற அச்சம் பயணிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பெட்டியில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் அந்த பெட்டி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.