செய்திகள்
காரைக்கால் தருமபுரம் பகுதியில் சப்-கலெக்டர் ஆதர்ஷ் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

கொரோனா நோயாளிகள் வெளியே வர தடை: சப்-கலெக்டர் எச்சரிக்கை

Published On 2021-05-07 22:35 GMT   |   Update On 2021-05-07 22:35 GMT
கொரோனா பாதித்த நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வர தடை விதித்து இருப்பதாக சப்-கலெக்டர் ஆதர்ஷ் எச்சரித்தார்.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நலவழித்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் இதை மீறி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் செல்வதால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட காரைக்கால் தருமபுரம் பகுதியில் சப்-கலெக்டர் ஆதர்ஷ், தாசில்தார் பொய்யாதமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது சப்-கலெக்டர் ஆதர்ஷ் கூறுகையில், ‘கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்குள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மகளிர் சுயஉதவிக்குழுவினரை பயன்படுத்தலாம்’ என்றார்.
Tags:    

Similar News