செய்திகள்
என்ஆர் காங்கிரஸ்

புதுவை சட்டமன்ற தேர்தல்: என்.ஆர்.காங்- பா.ஜனதா, அதிமுக கூட்டணி முன்னிலை

Published On 2021-05-02 08:34 GMT   |   Update On 2021-05-02 08:34 GMT
என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்து வருவதால் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஒரு அணியாகவும் போட்டியிட்டது.

இதுதவிர அ.ம.மு.க., மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சுயேச்சைகள் என 30 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜனதா 9, அ.தி.மு.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட தொகுதியில் போட்டியிட்டது.

இதில் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதனால் 14 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது.

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் புதுவையில் தாகூர் கலைக்கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக், மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் ஆகிய இடங்களிலும், காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியிலும், மாகி, ஏனாமில் மண்டல நிர்வாக அலுவலகங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக முதல் சுற்றில் புதுவையில் மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜர்நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம், காரைக்கால் மாவட்டத்தின் நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, மாகி ஏனாம் ஆகிய 12 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. ஒரு சில தபால் ஓட்டுகளுக்கு முகவர்கள் விதிமுறைகள் பின்பற்றப்படாதது, அதிகாரிகள் கையெழுத்திடாதது குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த ஓட்டுகள் ரத்து செய்யப்பட்டது. விதிமுறைகளுக்கு உட்பட்ட ஓட்டுகள் மட்டும் ஏற்கப்பட்டது. தொடர்ந்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது.

முதல் சுற்றில் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர், மண்ணாடிப்பட்டு ஆகிய 3 தொகுதிகளில் பா.ஜனதாவும், ஏனாம், நெடுங்காடு, மங்கலம், கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரசும் என 7 தொகுதியில் முன்னணியில் இருந்தனர்.

உப்பளத்தில் தி.மு.க.வும், மாகி, லாஸ்பேட்டையில் காங்கிரஸ் என 3 தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்தது. முதல் சுற்றில் 10 தொகுதிகளில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதியிலும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 3 தொகுதியிலும் முன்னணியில் உள்ளது. மற்ற 2 தொகுதிகளின் ஓட்டு எண்ணப்பட்டு வருகிறது.

மண்ணாடிப்பட்டில் பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், காமராஜர் நகரில் ஜான்குமார், நெல்லிதோப்பில் ரிச்சர்ட், ஏனாமில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, நெடுங்காடு சந்திரபிரியாங்கா, மங்களம் தேனீ.ஜெயக்குமார், கதிர்காமம் கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோரும் முன்னிலையில் உள்ளனர்.

உப்பளத்தில் தி.மு.க. வேட்பாளர் அனிபால் கென்னடி, மாகியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் பிரேம்பாத், லாஸ்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியநாதன், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

கடந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்து வருவதால் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

2-வது கட்டமாக புதுவையில் திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய 8 தொகுதிகள், காரைக்காலில் திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும்.

இதன் முழுமையான முடிவு மாலை 6 மணிக்கு தெரியும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு எஞ்சிய தொகுதிகளான ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர் உள்ளிட்ட 7 தொகுதிகள், காரைக்காலில் நிரவி திருப்பட்டினம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Tags:    

Similar News