செய்திகள்
போலீசார் விசாரணை

புதுக்கோட்டை கல்லூரி மாணவியை கொன்று நகை கொள்ளை: காதலன்-உறவினரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2021-04-28 13:49 IST   |   Update On 2021-04-28 13:49:00 IST
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் காதலன் மற்றும் உறவினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20).

இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். பழனியப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் லோகப்பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் சிவகாமி வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது‌. அவர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் லோகப்பிரியா முகத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை சம்பவம் நடந்த வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டும் திருடு போயிருந்தது.

கொள்ளையடித்துசென்ற அந்த நபர் லோகப்பிரியாவுக்கு தெரிந்த நபராக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், இந்த கொலை தொடர்பாக உறவினர் ஒருவரிடம் விசாரணையை நடத்தினர். இதற்கிடையில் லோகப்பிரியா வாலிபர் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. உடனடியாக அந்த காதலனையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றனர். 

Similar News