செய்திகள்
ஊரடங்கை பயன்படுத்தி மது விற்ற பெண்கள் உள்பட 11 பேர் கைது
ஊரடங்கை பயன்படுத்தி மது விற்ற பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கந்தர்வகோட்டை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதனையொட்டி டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததை பயன்படுத்தி சிலர் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் கந்தர்வகோட்டையில் மதுவிற்ற நாகராஜ் (வயது 23), கவிக்குயில்(35), அமுதா (28), சசிகலா (52), சசிகுமார் (38) ஆகிய 5 பேரை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுவிற்ற சிலர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். ஆவூர் அருகே உள்ள குமரபட்டி பகுதியில் மது விற்றதாக வேல்முருகன் (40), சந்திரசேகர் (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விராலிமலை புதிய பஸ் நிலையம் மற்றும் செட்டியபட்டி பகுதிகளில் மது விற்ற துரைராஜ் (50), பெருமாள் (45), சண்முகம்(56) ஆகிய 3 பேரை விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் கைது செய்தார். அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வடகாட்டில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் வழியில் நரிக்குளம் அருகேயுள்ள தென்னந்தோப்பு பகுதியில் மது விற்ற பள்ளத்தி விடுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துரைராஜ் (42) என்பவரை வடகாடு தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு முருகேசன் கைது செய்தார். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,600 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஆவணம் கைகாட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் பெட்டிக்கடையில் மது விற்ற கறம்பக்காடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.