செய்திகள்
தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2021-04-25 11:09 GMT   |   Update On 2021-04-25 11:09 GMT
வேளாங்கண்ணி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி போலீஸ் சரகம் மாணிக்கபங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னே‌‌ஷ். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது26).இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கலைச்செல்வி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் கலைச்செல்வி தூக்குப்போட்டு கொண்டார். அப்போது சத்தம் கேட்டு விக்னேசின் தாயார் ஓடிச்சென்று பார்த்தபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மகன் விக்னேசை அழைத்து கதவை உடைத்து சென்று பார்த்த போது கலைச்செல்வி தூக்கி தொங்கி உள்ளார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கலைச்செல்விக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் நாகை உதவி கலெக்டர் மணிவேலன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News