செய்திகள்
கைதான 4 பேரையும், மீட்கப்பட்ட நகைகளையும் காணலாம்

வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.91½ லட்சம் நகைகள் திருட்டு- கிளை மேலாளர் உள்பட 4 பேர் கைது

Published On 2021-04-24 03:16 GMT   |   Update On 2021-04-24 03:16 GMT
நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை ஊழியர்களே திருடி அடகு வைத்து பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே தெற்கு 4-ம் வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக மாலையீடு பகுதியை சேர்ந்த உமாசங்கர் (வயது 42), தங்க நகை கடன் பிரிவில் சோலைமணி (37), தனி கடன் பிரிவில் முத்துகுமார் (28) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் தணிக்கை நடைபெறும். அதன்படி கடந்த 21-ந் தேதி அதிகாரிகள் நிறுவனத்தில் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள நகைகளை ஒப்பிட்டு பார்த்தனர். அதில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 305.625 பவுன் நகைகள் குறைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ஆகும்.

வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைக்கும்போது அவர்களது பெயர், விவரம், முகவரி, நகைகள் விவரத்தை ஒரு பாலிதீன் கவரில் எழுதி, அதனுள் நகைகளை வைத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். இதில் தணிக்கையின்போது பாதுகாப்பு பெட்டகத்தில் பாலிதீன் கவர்கள் மட்டும் இருந்துள்ளது. அதனுள் நகைகள் இல்லை. அந்த கவர்கள் பிளேடால் கிழிக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

நகை கடன் பிரிவில் பணியாற்றும் ஊழியரான சோலைமணி மற்றும் ஊழியர் முத்துக்குமார், கிளை மேலாளர் உமாசங்கர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ரமேஷ், கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கிளை மேலாளர் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை எடுத்து சென்று புதுக்கோட்டையில் பழனியப்பா கார்னரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து பணம் பெற்றதும், அதனை சுழற்சியாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அங்கு, போலியான முகவரிகளில் நகைகளை அடகு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அந்த தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் மாரிமுத்தும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனையடுத்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முகமது ஜாபர் (கணேஷ்நகர்), குருநாதன் (டவுன்) மற்றும் போலீசார் நேற்று அவர்களை அழைத்து கொண்டு அந்த நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அந்த நிறுவனத்தின் மேலாளர் மாரிமுத்து மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மேற்கண்ட நபர்கள் அடகு வைத்த நகைகளின் விவரத்தை கேட்டனர். போலீசாரின் விசாரணையில் பயந்து அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு நகைகளை எடுத்து காண்பித்தனர்.

நகைகளை ஒவ்வொரு பொட்டலமாக பார்சலில் வைத்திருந்துள்ளனர். அந்த பொட்டலங்கள் அனைத்தையும் போலீசார் சரிபார்த்து அனைத்து நகைகளையும் மீட்டனர். அதனை ஒரு சாக்குப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு போலீசார் வெளியே வந்தனர். உமாசங்கருக்கும், நகைகளை அடகு வைத்த நிதி நிறுவனத்தின் மேலாளர் மாரிமுத்துவுக்கும் பழக்கம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து உமாசங்கர், சோலைமணி, முத்துகுமார், மற்றொரு நிதி நிறுவன மேலாளர் மாரிமுத்து ஆகிய 4 பேரையும் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை ஊழியர்களே திருடி அடகு வைத்து பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News