செய்திகள்
இரவுநேர ஊரடங்கால் ஈரோடு பஸ் நிலையத்திலேயே தூங்கிய பயணிகள்.

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கால் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிய பயணிகள்

Published On 2021-04-21 16:00 IST   |   Update On 2021-04-21 16:00:00 IST
பெரும்பாலான பஸ்கள் முன்கூட்டியே இயக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பலர் பஸ் கிடைக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பஸ் நிலையத்திலே விடிய விடிய காத்திருந்தனர்.
ஈரோடு:

தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு தொடங்கியது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்திலும் நேற்று இரவு 9 மணி அளவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வெளியூர்களுக்கு மாலை 5 மணியுடன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடைசியாக சென்ற பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

இதேபோல் ஈரோட்டில் இருந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளான கொடுமுடி, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இரவு 10 மணிக்குள் பஸ்களை இயக்கினர்.

ஈரோடு நகரில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு மேல்தான் பூட்டப்படும். இதனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்லும் கடைசி பஸ்சை பிடிக்க அலறியடித்து ஓடி வந்தனர்.

ஆனால் பெரும்பாலான பஸ்கள் முன்கூட்டியே இயக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பலர் பஸ் கிடைக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பஸ் நிலையத்திலே விடிய விடிய காத்திருந்தனர். பஸ் நிலைய பகுதியை ஒட்டி இருந்த கடைகளில் இரவு உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கினர். சிலர் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வந்திருந்தனர். அவர்களும் பஸ் கிடைக்காததால் பஸ் நிலைய நடைமேடைகளில் தூங்கினர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் பஸ்கள் இயங்க தொடங்கியதும் பஸ் நிலையத்தில் காத்திருந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, இரவு வேலை முடிந்து வருவதற்குள் பஸ் சென்று விட்டது. இதனால் வீட்டிற்கு திரும்ப முடியாமல் பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். மீண்டும் காலை 4 மணி முதல் பஸ் இயக்கப்படுவதால் இப்போது வீட்டிற்கு செல்கிறோம்.

வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் நாங்கள் ஈரோட்டிற்கு வேலைக்கு வரவேண்டிய சூழல் உள்ளது என்றனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராமபுற மக்கள் பஸ்சுக்காக பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்.



Similar News