ஈரோடு ரெயில் நிலையத்தில் முககசவம் அணியாமல் வந்த 10 பேருக்கு தலா ரூ.500 அபராதம்
ஈரோடு:
கடந்த ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு பொது போக்குவரத்து சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதன்படி ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் படிப்படியாக தொற்று குறைய ஆரம்பித்ததால் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் முன் பதிவுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ரெயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று முதல் ரெயில் நிலையங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ஈரோடு ரெயில் நிலையத்தில் முககவசம் அணியாமல் வந்த பயணிகள், ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மட்டும் 10 பயணிகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ரெயில் நிலையங்களிலும், ரெயிலில் பயணிக்கும் போதும் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த அபராதத்தை ரெயில் நிலைய மேலாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தால் அங்கீகாரம் பெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் வசூலிப்பார்கள்.