செய்திகள்
கோப்புபடம்

பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார் வாலிபர் மீது இளம்பெண் புகார்

Published On 2021-04-16 16:27 IST   |   Update On 2021-04-16 16:27:00 IST
ஈரோடு அருகே பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார் என வாலிபர் மீது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு:

கோபிசெட்டிபாளையம் அடுத்த சிங்கிரிபாளையம், வடக்கு வீதியை சேர்ந்த முத்துமாரி (வயது 22) என்ற பெண் இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு பேஸ்புக் மூலம் தீனதயாளன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் அவரிடம் வேலை கேட்டு இருந்தேன். அவர் திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்.இதைத்தொடர்ந்து நான் திருப்பூருக்கு சென்றேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிட்டார். நான் அந்த கம்பெனியின் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தேன்.

இந்நிலையில் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை வெளியில் வீடு பார்த்து உள்ளதாக கூறினார். இதனால் நான் விடுதியை காலி செய்து அவருடன் ஒரே வீட்டில் தங்கினேன். திருமணம் ஆகாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் அவர் என்னை கட்டாயப்படுத்தி ஒன்றாக இருந்தோம். நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அதற்கு என் பெற்றோர் சம்மதம் வேண்டும் என்று கூறி 6 மாதம் தட்டிக்கழித்து வந்தார். என் தங்கை வாழாமல் பெற்றோர்களுடன் இருப்பதாகவும் அவர் விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்த பிறகுதான் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என எனது பெற்றோர்கள் தெரிவித்து விட்டதாக என்னிடம் கூறினார். நானும் அதற்கு சரி என்று கூறிவிட்டேன்.

பின்னர் அவர் வாரத்துக்கு 2 முறை மட்டுமே வந்து செல்வார். இந்நிலையில் நான் கர்ப்பம் ஆனேன். அவரிடம் இது குறித்து கூறி என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தினேன். அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

இதையடுத்து நான் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். உடனே தீனதயாளன் அவரது பெற்றோர் என்னை தடுத்து நிறுத்தி திருமணம் செய்து வைப்பதாக உறுதி கூறினார்கள். உங்கள் திருமணம் நடைபெற வேண்டுமானால் கர்ப்பத்தை கலைத்து விட்டு வாருங்கள் என்றனர். இதையடுத்து தீனதயாளன் தாய் ஒரு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று கரு கலைக்க வைத்தார். பின்னர் ஓட்டு போடுவதற்காக என்னை எனது ஊருக்கு அனுப்பி வைத்தார். தேர்தல் முடிந்து ஓட்டு போட்ட பிறகு மீண்டும் அவங்க ஊருக்கு சென்றபோது நீ வரக்கூடாது என தீனதயாளன் மற்றும் அவரது பெற்றோர் என்னை மிரட்டினார்கள். என் மகன் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டான் எனவும் கூறிதுரத்தி விட்டனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். என்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய தீனதயான் மற்றும் அவர் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Similar News