செய்திகள்
பலத்த மழை காரணமாக ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 40 வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது

Published On 2021-04-16 10:49 GMT   |   Update On 2021-04-16 10:49 GMT
ஈரோட்டில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் அதிகரித்து சென்றதால் அசோகபுரி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. 3-வது நாளாக நேற்று மாலையும் பெருந்துறை, குண்டேரி பள்ளம், மொடக்குறிச்சி ஈரோடு, சென்னிமலை, வரட்டுப்பள்ளம் நம்பியூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.

மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டோனி பிரிட்ஜ் அருகே உள்ள அசோகபுரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பள்ளம் ஓடை அருகே இந்த குடியிருப்புகள் உள்ளது.

பலத்த மழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் அதிகரித்து சென்றதால் அசோகபுரி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் இருந்த 4 குடிசை வீடுகளும் சேதமடைந்தன.

இதுபற்றி தெரிய வந்ததும் தாசில்தார் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுத்தார். மழை வெள்ளம் காரணமாக அசோகபுரி பகுதி சேறும் சகதியுமாக மாறியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்டு அருகே உள்ள ஆதிதிராவிடர் அரசினர் மாணவர் தங்கும் விடுதியில் தங்க வைத்தனர். அவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது.

தற்போது அந்த பகுதியில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் சேறும் சகதியும் சூழ்ந்திருப்பதால் மாநகராட்சி பணியாளர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் பழைய பூந்துறை ரோடு பகுதியில் 10 -க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அவதி அடைந்தனர். அவர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பழைய பூந்துறை ரோடு பகுதியில் வீடுகளில் புகுந்த தண்ணீர் வடிய தொடங்கியது மக்கள் மீண்டும் வீட்டுக்கு செல்ல தொடங்கினர்.

பலத்த மழை காரணமாக மொடக்குறிச்சி பகுதியில் மழை வெள்ளத்தில் மஞ்சள் மூழ்கியது. அதேபோல் சத்தியமங்கலம், கோபி, நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

இந்நிலையில் ஈரோடு உட்பட 8 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருந்துறை-49, குண்டேரிப்பள்ளம்-41, மொடக்குறிச்சி-32, ஈரோடு -30, சென்னிமலை-20, வரட்டுப்பள்ளம்-14, நம்பியூர்-12, கொடிவேரி-7.2, சத்தியமங்கலம்-7, கவுந்தப்பாடி-5.2, கொடுமுடி-4, கோபி-4, பவானிசாகர்-2.8, அம்மா பேட்டை-2.4.


Tags:    

Similar News