செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா அறிகுறி இருந்தால் அலட்சியம் வேண்டாம்- சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்

Published On 2021-04-16 06:47 GMT   |   Update On 2021-04-16 06:47 GMT
கொரோனா அறிகுறி இருந்தால் அலட்சியமாக இருக்கவேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளாததும், அதற்கான சிகிச்சை எடுத்து கொள்ளாததுமே தொற்று பரவ காரணம் ஆகும்.

அதுமட்டுமின்றி நோய் தீவிரமடைந்த பிறகு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம் உயிரிழப்பை தடுப்பதோடு மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News