செய்திகள்
அபராதம்

ஷேர் ஆட்டோவில் 19 பயணிகளை ஏற்றி வந்த டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2021-04-10 08:13 GMT   |   Update On 2021-04-10 08:13 GMT
மேலும் அந்த பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன் இன்று காலை வ.வ.சி பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கொரோனா பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஸ்டோனி பிரிட்ஜில் உள்ள மீன் மார்க்கெட், கருங்கல் பாளையம் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது மீன் மார்க்கெட்டில் கடைகளுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து மரப்பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒரு ஓட்டல் மற்றும் பேக்கரியில் கொரோனா பாதுகாப்பு முறையாக பின்பற்றப்படாததால் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

மேலும் அந்த பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது மரப்பாலம் நால்ரோடு பகுதியில் ஷேர் ஆட்டோ ஒன்று வந்து பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தது.

அந்த ஆட்டோவில் 19- க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன் அந்த ஷேர் ஆட்டோ டிரைவருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்ததால் அந்த ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின்போது நகர் நல அலுவலர் முரளி சங்கர், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News