செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் சட்டமன்றத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயசந்திர பானுரெட்டி சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.