செய்திகள்
தேக்கமடைந்துள்ள ரயான் துணிகள்.

ஈரோட்டில் இருந்து வெளிமாநிலத்துக்கு ஊரடங்கு அச்சம் காரணமாக துணிகள் அனுப்புவது நிறுத்தம்

Published On 2021-04-09 08:21 GMT   |   Update On 2021-04-09 08:21 GMT
வடமாநிலங்களில் கொரோனாவுக்கான ஊரடங்கு விதித்து, அங்கு ஜவுளி விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பணிகள் பாதித்துள்ளன. இதனால், அங்கிருந்து கடந்த 10 நாட்களாக புதிய ஆர்டர் ஈரோடு உள்ளிட்ட கொங்குமண்டல பகுதிக்கு வழங்க வில்லை.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம், சூளை, அக்ரஹாரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சாதா துணி, ரயான் துணிகள் அதிகமாக உற்பத்தியாகிறது.

இங்கு மட்டும் தினமும், ரூ.7 கோடி மதிப்பில், 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தியாகிறது. இவற்றை மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு காடா துணியாகவும், மதிப்பு கூட்டப்பட்ட துணியாக மாற்றி பெறவும் அனுப்புவர்.

கடந்த 2 மாதமாக வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து, தற்போது, தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றதால், ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே, இரவில் முழு ஊரடங்கும், பகலில் பல்வேறு கட்டுப்பாடும் உள்ளதால், ஜவுளி தொடர்பான பணிகள் பாதித்துள்ளன. இதனால், அங்கிருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைக்காமலும், இங்கிருந்து துணிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது:-

ஜவுளி சார்ந்த தொழிலில் வடமாநிலத்தை அதிகமாக நாம் நம்பி உள்ளோம். மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மேற்குவங்காளம் உட்பட பல மாநிலத்தினர், இங்கிருந்து காடா துணியாக வாங்குவர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினையால், துணிகளில் மதிப்பு கூட்டப்பட்டதாக மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இதனால், வடமாநிலம் அனுப்பி பெறும் நிலை உள்ளது. இதற்காகவும் துணிகளை அனுப்பி வருகிறோம்.

வடமாநிலங்களில் கொரோனாவுக்கான ஊரடங்கு விதித்து, அங்கு ஜவுளி விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பணிகள் பாதித்துள்ளன. இதனால், அங்கிருந்து கடந்த 10 நாட்களாக புதிய ஆர்டர் ஈரோடு உள்ளிட்ட கொங்குமண்டல பகுதிக்கு வழங்க வில்லை.

இங்கிருந்து துணியை அனுப்பினால், அதற்கான பணம் பெறுவதிலும், மதிப்பு கூட்டப்பட்ட துணியாக மாற்றி திரும்ப வாங்கும் அளவு அவகாசம் உள்ளதா? என தெரியவில்லை.

இதனால், துணி அனுப்பும் பணியை கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைத்துள்ளோம். ஏற்கனவே நூல் விலை உயர்ந்து, துணி விலை குறைந்துள்ளது. வடமாநில ஆர்டர் இல்லாத நிலையில், துணி விலை மேலும் உயர்கிறது. ஈரோடு பகுதியில் தினமும் 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தியாகும் நிலையில், தற்போது உற்பத்தியை குறைத்து 5 லட்சம் மீட்டர் அளவுக்கே உற்பத்தி செய்கிறோம். அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகளுக்கு ஏற்ப, அடுத்த கட்ட உற்பத்தி நிலை இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News