செய்திகள்
முருகன் தோட்டம் கிராமத்தில் சேதமடைந்து காணப்படும் நீர்த்தேக்க தொட்டியை படத்தில் காணலாம்.

சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தரப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-04-01 17:50 IST   |   Update On 2021-04-01 17:50:00 IST
அசிக்காடு ஊராட்சி முருகன் தோட்டம் கிராமத்தில் சேதமடைந்து காணப்படும் நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தரப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த அசிக்காடு ஊராட்சி முருகன் தோட்டம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி மிகுந்த சேதம் அடைந்து தண்ணீர் குழாய்கள் உடைந்து இரும்பு ஏணி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் வண்ணம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்த நீர்த்தேக்க தொட்டியின் மிக அருகில் அய்யனார்கோவில், பிள்ளையார்கோவில், பிடாரியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்வதால் பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென இடிந்து விழுந்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்பட கூடும் என்று அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே முருகன் தோட்டம் கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்டி தர நடவடிக்கை எடுப்பார்களா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News