செய்திகள்
ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
ஆ.ராசாவை கண்டித்து சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. மகளிர் அணியினர் சிவகாசி பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி:
தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், அவரது தாயாரை பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் ஆ.ராசாவை கண்டித்து சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. மகளிர் அணியினர் நேற்று பல்வேறு இடங்களில் இருந்து சிவகாசி பஸ் நிலையம் அருகில்திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து விருதுகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி தலைமையில் மகளிர் அணியினர் சாத்தூர் ரோட்டில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் நின்றபடி ஆ.ராசாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிக்குமார், சசிமலர் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகளிர் அணியினரை கலைந்து போக செய்தார்.
அதேபோல விருதுநகரில் முன்னாள் நகரசபை தலைவர் சாந்தி மாரியப்பன், அ.தி.மு.க. நகர மகளிரணி செயலாளர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் பிரேமா தலைமையிலும், ஆலங்குளத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் பரமேஸ்வரி தலைமையிலும், ராஜபாளையத்தில் அ.தி.மு.க. மகளிர் அணியினர், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.