செய்திகள்
கேஎஸ் அழகிரி

தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள் - காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

Published On 2021-03-25 10:29 GMT   |   Update On 2021-03-25 10:29 GMT
தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கிருஷ்ணகிரி:

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ராகுல்-ஸ்டாலின் தலைமை என்பது ஒரு சிறந்த தலைமையாக கருதப்படுகிறது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதை என்னுடைய சுற்றுப்பயணத்தின் மூலம் காண முடிந்தது. தமிழகத்தின் பிரதான கோரிக்கைகளான வளர்ச்சி, வேலை வாய்ப்பு தேவைப்படுகிறது. எங்களின் கூட்டணியால் தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தி தர முடியும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தர முடியும்.

சிறந்த பொருளாதார கொள்கைகளை பின்பற்றி தமிழகத்தை மேம்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் எந்த ஒரு துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண முடியவில்லை. ஆனால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்தால் முன்னேற்றத்தை அவர் கொடுப்பார் என மக்கள் நம்புகிறார்கள். கிராமப்புறங்களில் ஊராட்சிகளில் தான் ஏலம் விடுவார்கள்.

அதே போல அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் பதவி ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதனால் மக்களின் உணர்வுகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் படிப்படியாக கட்சியில் வளர்ந்து வந்தவர். கிளை செயலாளர் பதவியில் இருந்து அவர் இந்த நிலைக்கு வந்துள்ளார். மக்கள் அவரை நம்புகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. ஏராளமான களவுகள், கொலைகள் நடந்து வருகின்றன. இதை அவரது அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலைகள், கொள்ளை சம்பவம் நடந்தன. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக புகழ் பெற்ற தமிழக காவல் துறையால், முன்னாள் முதல்-அமைச்சரின் இருப்பிடத்தில் நடந்த கொலை, கொள்ளையை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அரசை எந்த வகையில் நடத்துகிறார்கள் என்பதற்கு இதுவே சான்றாகும். தற்போது மக்களிடம் உள்ள எழுச்சியை பார்த்தால் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்தியாவில் இதுபோன்ற ஒரு விலைவாசி உயர்வை யாரும் பார்த்ததில்லை.

மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் என்று இருந்த போது மன்மோகன்சிங் லிட்டர் ரூ.70-க்கு பெட்ரோலை தந்தார். ஆனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரி பாதியாக குறைந்துள்ளது. அதாவது 54 டாலர். அப்படியானால் அவர் பெட்ரோல் விலையை ரூ.35-க்கு கொடுக்க வேண்டும். ஆனால் இன்றோ பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டு விட்டது.

500, 1000 ரூபாய் எதற்காக செல்லாது என்று மோடி சொன்னார் என்று அவருக்கும், அவரது அமைச்சரவைக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியவில்லை. அதனால் நமது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததை தவிர, எழுச்சி அடையவில்லை. தவறான பொருளாதார விளைவுகள், ஏதேச்சை அதிகார ஆட்சியால் இந்தியாவில் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த பேரழிவுகளுக்கு காரணம் மோடியும், அவருக்கு துணையாக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமியும் தான்.

கருத்து கணிப்புகளை பற்றி எனக்கு தீர்க்கமான முடிவு கிடையாது. ஆனால் ஒன்றை உணர்கிறேன். கடந்த 15 நாட்களாக நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. பெண்கள், இளைஞர்கள் அதிகமாக வருகிறார்கள். தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது. வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் கூறுவதை நம்ப முடியாது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இவர்கள் எவ்வளவு அரசு பணியிடங்களை தந்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News