செய்திகள்
கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசிய போது எடுத்த படம்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்கும் பணி - கிருஷ்ணகிரி கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2021-03-25 15:50 IST   |   Update On 2021-03-25 15:50:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சுழற்சி முறையில் வழங்கும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சூழற்சி முறையில் வழங்கும் பணிகள் நடந்தது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் பல்சானா, பார்த்தசாரதி சென்ஷர்மா, ஹன்ஸ்ராஜ் சுஹான், அனைத்து அரசியல் கட்சி இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்கனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், இணையதளம் வாயிலாக சூழற்சி முறையில் 2 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேர்தல் ஆணையத்தின் இணைதளம் வாயிலாக சுழற்சி முறையில் வழங்கும் பணிகள் தற்போது நடைபெறுகிறது.

மேலும், வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மின்னணு வாக்குப்பதிவு எந்திர சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Similar News