செய்திகள்
கோப்புபடம்

சாத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் - நகராட்சி நடவடிக்கை

Published On 2021-03-20 05:36 IST   |   Update On 2021-03-20 05:36:00 IST
சாத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சாத்தூர்:

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் சாத்தூர் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் உத்தரவின் பேரில் சாத்தூர் நகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு சுகாதார அலுவலர் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, கண்ணன், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் குழுவாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த குழுவினர் மெயின் ரோடு, பஸ் நிலையம், மார்க்கெட், வெம்பக்கோட்டை ரோடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும் இந்த குழுவினர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றி பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், வீதிக்கு வந்து வீட்டிற்கு செல்லும்போது கை மற்றும் கால்களை சோப்பினால் கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், இதுவரை முக கவசம் அணியாத 50 நபர்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக நகராட்சிஆணையாளர் ராஜமாணிக்கம் கூறினார்.

Similar News