செய்திகள்
மறைமலைநகரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலி
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் யமுனா (வயது 65), இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார்.
லைட்டர் சரியாக வேலை செய்யாததால், ஞாபக மறதியால் கியாஸ் அடுப்பை ஆப் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு வீட்டில் இருந்து வத்தீப்பெட்டியை எடுத்து வந்து பற்ற வைத்தார். ஏற்கனவே கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்ததால் பயங்கரமாக தீப்பிடித்து கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் படுகாயம் அடைந்த யமுனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி யமுனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.