செய்திகள்
அபராதம்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகள்- பொதுமக்களுக்கு அபராதம்

Published On 2021-03-17 17:08 IST   |   Update On 2021-03-17 17:08:00 IST
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்களில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் நிலை உள்ளது. கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் காட்டும் அலட்சிய போக்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் பங்கேற்கும்போதும், பயணங்கள் மேற்கொள்வதிலும் கட்டுப்பாடு இல்லாத நிலை தொடர்வதும், பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்து வருவதும் கொரோனா தொற்றின் அதிகரிக்கும் விதமாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்களில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, கிருமிநாசினி பயன்படுத்தாதது மற்றும் வெப்பமானி உபயோகிக்காதது போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 6-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், முககவசம் அணியாமல் வந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் மொத்தம் ரூ.8,200 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது மண்டல துணை தாசில்தார் விமலா, வட்ட வழங்கல் அலுவலர் சரண்யா, வருவாய் ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News