செய்திகள்
கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளி மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா- மாணவர்கள், பெற்றோர் கலக்கம்

Published On 2021-03-11 22:41 IST   |   Update On 2021-03-11 22:41:00 IST
புதுவையில் பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மாணவர்கள், பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமத்தில் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து அந்த பள்ளிக்கு வருகிற 15-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆசிரியையுடன் பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அவர் வகுப்பு எடுத்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுவை மரப்பாலம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அந்த ஆசிரியரிடம் படித்த மாணவர் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

புதுவையில் அடுத்தடுத்து 2 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என்று யோசனையில் உள்ளனர்.

Similar News