செய்திகள்
சீர்காழி அருகே குரங்குகள் தொல்லையால் மக்கள் அவதி
சீர்காழி அருகே மக்களுக்கு தொல்லை அளிக்கும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி பகுதியில் கம்பன் நகர், மனோன்மணியம் நகர், கே.வி.எஸ். நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் வீடுகளில் புகுந்து வீடுகளில் உள்ள மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருட்களை எடுத்து செல்கிறது. சில நேரங்களில் வீடுகளில் உள்ள பொருட்களை பிளாஸ்டிக் டப்பா, சில்வர் டப்பாக்களுடன் எடுத்து கொண்டு ஓடிவிடுகிறது. அப்போது விரட்ட முயலும் நபர்களை குரங்குகள் கடித்து விடுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சட்டநாதபுரம் ஊராட்சி கே.வி.எஸ். நகரை சேர்ந்த 70 வயது முதியவரை குரங்கு கடித்தது. இதைப்போல கம்பன் நகரை சேர்ந்த ஆசிரியை ஒருவரையும் குரங்கு கடித்து காயப்படுத்தியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். எனவே வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.