செய்திகள்
பட்டாசு ஆலை

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் இன்று மீண்டும் திறப்பு

Published On 2021-03-09 07:16 GMT   |   Update On 2021-03-09 07:16 GMT
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்படும் என டான்பாமா தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்களை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், வெடி பொருள் கட்டுப்பாட்டு துறையும் தனித்தனியாக சோதனை நடத்தி சில பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைத்தன.

இந்த நிலையில் பட்டாசு ஆலைகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆலைகளை காலவரையின்றி மூட உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று 90 சதவீத பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் இன்று அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்படும் என டான்பாமா தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பட்டாசு ஆலைகளை மூடியது தொடர்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், மாவட்ட நிர்வாகமும் எங்களிடம் பேசினர். தொழிலாளர்களின் நலன் கருதி ஆலைகளை திறக்க வேண்டும். பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது என கேட்டுக்கொண்டனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு தொடரும், விதிமீறல்கள் இருந்தால் சுட்டிக்காட்டப்படும். அதனை செய்ய அறிவுரை வழங்கப்படும். அதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகும் விதிமீறல்கள் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை ஏற்று இன்று முதல் பட்டாசு ஆலைகளை திறந்துள்ளோம். நாங்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதில்லை. எங்கள் கவனத்தையும் மீறி ஏதாவது நடந்தால் அதனை சுட்டிக்காட்டினால் சரி செய்ய தயாராக இருக்கிறோம். வெடி விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வெடி பொருள் கட்டுப் பாட்டுத்துறை விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றார்.

Tags:    

Similar News