செய்திகள்
சீர்காழியில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி கொலுசுகள் மற்றும் பணம்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.14 லட்சம், 4 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

Published On 2021-03-08 03:56 GMT   |   Update On 2021-03-08 03:56 GMT
சீர்காழியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசு மற்றும் ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பாிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலரும், கூட்டுறவு சங்க சார்பதிவாளருமான மணிகண்டன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்த பாக்சந்த் மகன் அபிஷேக் (வயது30) தனது காரில் அந்த வழியாக வந்தார்.

இந்த காரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை நடத்தினர். சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இ்ன்றி 4 கிலோ பழைய வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.90 ஆயிரம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. கொலுசுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து காரை ஓட்டி வந்த அபிஷேக்கிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அபிஷேக் சீர்காழியில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வந்ததும் கொலுசுகள் மற்றும் பணத்தை சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.90 ஆயிரத்தை சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான ஹரிஹரனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News