செய்திகள்
ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

Published On 2021-03-06 07:21 IST   |   Update On 2021-03-06 07:21:00 IST
விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் முத்து, (வயது 37). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது மனைவி முத்துமாரியுடன் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் இருவரும் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் வளாகம் பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் செந்தில்முத்துவின் மனைவி முத்துமாரி பலியானார்.

இதை தொடர்ந்து செந்தில்முத்து தனக்கு நஷ்ட ஈடு தரக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம், விபத்தில் பலியான முத்துமாரி குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை மதுரை அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த தொகை வழங்காததால் செந்தில் முத்து தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மதுரை கோட்டத்திற்கு சொந்தமான 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

நேற்று காலை 2 அரசு பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தன. அங்கு வந்த கோர்ட்டு ஊழியர்கள் அந்த 2 பஸ்களையும் ஜப்தி செய்தார். அதில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Similar News