செய்திகள்
மயிலாடுதுறையில் சொத்து பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோதல் - 5 பேர் கைது
மயிலாடுதுறையில் சொத்து பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி சாந்தா (வயது 61). இவர்களது மூத்த மகன் செந்தில்குமார் (42), இவருடைய சகோதரர்கள் சிங்காரவேல் (39), வெற்றிவேல் (36), சரவணன் (32). இவர்களில் செந்தில்குமார் மனைவி சத்யபிரியாவுடன் தனியாக வசித்து வருகிறார். செந்தில்குமாருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.
இந்தநிலையில் செந்தில்குமார் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த குளியலறை இடிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சத்யபிரியா கணவரின் குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டுள்ளார்.
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணன், வெற்றிவேல், சிங்காரவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து சத்யப் பிரியாவை அடித்து தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது தாய் சாந்தாவை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக சத்யபிரியா கொடுத்த புகாரின் பேரில் சிங்கார வேல், வெற்றிவேல், சரவணன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல சாந்தா கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் செந்தில்குமார், மருமகள் சத்யபிரியா (30) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட மோதலால் ஒரு பெண் மற்றும் அண்ணன் தம்பிகள் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.