செய்திகள்
ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் நன்றி

Published On 2021-02-26 23:09 GMT   |   Update On 2021-02-26 23:09 GMT
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்துக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இந்த அறிக்கையை ஆனந்த கண்ணீரில் நனைந்து கொண்டுதான் எழுதுகிறேன். டாக்டர் அன்புமணி ராமதாசும் கிட்டத்தட்ட இதே மனநிலையில்தான் இருக்கிறார். சட்டசபையில் இடப்பங்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டபோது, ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பித்தேம்பி அழுதார். அவரது அழுகையை நிறுத்தவைக்க என்னாலும் முடியவில்லை. எங்களின் ஆனந்த கண்ணீருக்கு காரணம், மோசமான நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்தின் நிலை இதனால் உயரும் என்பதுதான்.

வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில், அதற்கான போராட்டத்தில் உயிர் துறந்த 21 பேரின் தியாகத்தை போற்றுகிறோம். அனைத்து சாதியினருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் கொள்கை என்ற வகையில் இந்த தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன்.

இதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன். இடப்பங்கீட்டுக்கு துணை நின்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இதற்காக பல்வேறு வழிகளில் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு, சட்டசபையில் இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்படுவதை சாத்தியமாக்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் வன்னியர் சங்கம், பா.ம.க. மற்றும் இரண்டரை கோடி வன்னியர்களின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News