செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர்

கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயரும் நிலையில் மானியமும் குறைப்பு- குடும்ப தலைவிகள் அதிர்ச்சி

Published On 2021-02-26 03:58 GMT   |   Update On 2021-02-26 03:58 GMT
வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்தில் 3-வது முறையாக உயர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் குடும்ப தலைவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்:

வீடுகளில் கரியடுப்பு, விறகடுப்பு, மரத்தூள் அடுப்புகளில் சமையல் செய்து வந்த நிலை மாறி தற்போது கியாஸ் சிலிண்டர் சமையல் பரவலாகி விட்ட நிலையில் கியாஸ் சிலிண்டர் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. மின் அடுப்பு உபயோகப்படுத்தி வந்தாலும் அது பரவலாக இல்லாத நிலையில் மத்திய அரசு ஏழைப் பெண்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கிய நிலையில் அனைத்து வீடுகளிலும் கியாஸ் சிலிண்டர் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பை தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் நடப்பு மாதத்தில் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மாதம் முதல் வாரத்தில் ரூ.25-ம், அதனை தொடர்ந்து ரூ.50-ம், தற்போது நேற்று ரூ. 25-ம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரே மாதத்தில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.100 உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.826 இருந்தபோது மத்திய அரசு மானியம் ரூ.265 வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்ட நிலையில் மானியம் ரூ.24.50 ஆக குறைக்கப்பட்டு விட்டது.

இந்த விலை உயர்வுக்கான அறிவிப்பு குடும்ப பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்கள் தற்போதுதான் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் ஓரளவு தங்களது பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரக்கூடிய நிலையில் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் கியாஸ் விலையையும் உயர்த்தி மத்திய அரசு குடும்ப தலைவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

கடந்த காலங்களில் கியாஸ் சிலிண்டர் விலை இதைவிட அதிகமாக வைக்கப்பட்டிருந்தாலும் மானியம் அதிகமாக இருந்ததால் குடும்பப் பெண்களுக்கு பாதிப்பு தெரியவில்லை. ஆனால் தற்போது மானியம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில் தொடர்ந்து கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது அவர்களுக்கு பெரும் பாதிப்பை மனதளவிலும், பொருளாதார அளவிலும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே மத்திய அரசு இதுகுறித்து உரிய முறையில் ஆய்வு செய்து வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News