செய்திகள்
அன்பழகன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு படுதோல்வியை சந்திக்கும்- அன்பழகன்

Published On 2021-02-22 04:12 GMT   |   Update On 2021-02-22 04:12 GMT
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு படுதோல்வியை சந்திக்கும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி:

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் முதல்-அமைச்சராக நாராயணசாமி உள்ளார். முதல்-அமைச்சரின் மக்கள் விரோத போக்கு, மத்திய அரசு, கவர்னருடன் மோதல், மாநில வளர்ச்சியில் அக்கறையின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மாநில நலன் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் சர்வாதிகாரமான செயலை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். தற்போது ஆளுங்கட்சியில் 12 எம்.எல்.ஏ.க்களும், எதிர்கட்சிக்கு 14 எம்.எல். ஏ.க்களும் உள்ளனர். எனவே மெஜாரிட்டியை இழந்த புதுவை அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

சட்டசபையில் நாளை (இன்று) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளும் அரசு படுதோல்வியை சந்திக்கும். புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் நமக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசுடனும், கவர்னருடனும் இணக்கமாக செயல்பட்டிருக்க வேண்டும். வருகிற தேர்தலில் மக்கள் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள். புதுவையில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் அதற்கு புதுவையை ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியாளர்கள் தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News