செய்திகள்
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநர்

புதுச்சேரி: மழை பாதிப்பு பகுதிகளில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு

Published On 2021-02-21 10:42 GMT   |   Update On 2021-02-21 10:42 GMT
புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. காலையிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.  கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்தது. 

இந்நிலையில், மழை பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர், சப்-கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, மழை பாதிப்புகள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் விளக்கினர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழையால் அதிகம் பாதிப்புக்குள்ளான ரெயின்போ காலனி, சோனம்பாளையம், முருங்கப்பாக்கம், தேங்காய்த்திட்டு பகுதியில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக வடிகால்கள், கால்வாய்களை சுத்தம் செய்தால் தண்ணீர் விரைவாக வடியும் என அறிவுறுத்தினார். 

அதன்பின்னர் ஆளுநர் மாளிகையில் மீண்டும் ஆய்வுக் கூட்டம் நடத்திய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News