செய்திகள்
சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட காட்சி.

ஆரணியில் சீட்டு நடத்தி பணமோசடி: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்தவர்கள் விரட்டியடிப்பு

Published On 2021-02-18 11:44 GMT   |   Update On 2021-02-18 11:44 GMT
ஆரணியில் சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை நாடகசாலை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் அன்புவேலன் (வயது 40). இவர் சுமார் 10 வருடங்களாக சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சீட்டு கட்டி முடித்தவர்களுக்கு அன்புவேலன் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் அளித்தனர். ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

மோசடி செய்த பணம் கோடிக்கணக்கில் இருப்பதால் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி துணைபோலீஸ் சூப்பிரண்டு காலம் கடத்தி வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆரணி டவுன் போலீஸ் நிலையத்துக்கு, அன்புவேலனை, போலீசார் வரவழைத்து, பாதிக்கப்பட்டவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் 50 சதவீத பணத்தை தந்துவிடுவதாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் 15 நாட்களாகிவிட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, மற்றும் போலீசார் விரட்டி அடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அன்புவேலன், அவரது தந்தை பாலசுந்தரம் ஆகிய இருவரின் வீடுகளுக்கும் பூட்டு போட சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், ஆரணி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்தனர்.

மேலும் அன்புவேலன் அவருடைய தந்தை பாலசுந்தரம் ஆகியோர் வீட்டில் இல்லை. அதனால் போலீசாரே வீட்டை பூட்டிவைத்துக்கொள்ளும்படி பொதுமக்கள் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் வரும்போது அவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். அதன்படி போலீசார் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
Tags:    

Similar News