செய்திகள்
திருக்குறள் சொல்லும் மாணவி

20 திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்... மாணவர்களை ஊக்குவிக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்

Published On 2021-02-18 08:35 GMT   |   Update On 2021-02-18 08:35 GMT
கரூர் பகுதியில் மாணவர்கள் மத்தியில் திருக்குறள் மீதான ஆர்வத்தை வளர்க்கும் விதமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் சலுகையை அறிவித்துள்ளார்.
கரூர்:

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் செங்குட்டுவன் தமிழ் ஆர்வலர் ஆவார். திருக்குறளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர், வள்ளுவர் உணவகம், வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் ஏஜென்சிஸ் போன்ற தனது அனைத்து நிறுவனங்களையும், திருவள்ளுவர் பெயரில் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் திருக்குறள் மீதான ஆர்வத்தையும், கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சலுகையுடன் கூடிய புதிய அறிவிப்பை வெளியிட்டார். 

கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 31ஆம் தேதி வரை அவரது பெட்ரோல் பங்கில் பத்து திருக்குறள் சொல்லும் குழந்தைகளுக்கு இருசக்கர வாகனத்திற்கு அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொல்லும் குழந்தைகளின் வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 10 திருக்குறள் ஒப்புவித்தால் அரை லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுகிறது.

பல மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்து திருக்குறள்களை ஆர்வத்துடன் ஒப்புவித்து வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு செல்கின்றனர்.

பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 90 ரூபாயை தாண்டி விற்பனை ஆகும் நிலையில், மாணவர்களிடையே திருக்குறள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், 10 குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்குவதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர். 
Tags:    

Similar News