செய்திகள்
நந்தினிக்கு நிவாரணத்தொகையை அமைச்சர் கே..டி.ராஜேந்திரபாலாஜி வழங்கிய போது எடுத்த படம்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

Published On 2021-02-16 23:47 IST   |   Update On 2021-02-16 23:47:00 IST
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்
சாத்தூர்:

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் 20 போ் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்தநிலையில் சாத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சத்திற்கான நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.

மேலும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் காயம் அடைந்த 19 பேருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.

அப்போது ராஜவர்மன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், கோட்டாட்சியர் காசி செல்வி, தாசில்தார் வெங்கடேஷ், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராேஜந்திரபாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதால் தி.மு.க உள்ளிட்ட சில இயக்கங்கள் பட்டாசு தொழிலை நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

உயிரிழப்பு என்பது எல்லா தொழிலும் இருக்கின்றது. ஆனால் பட்டாசு தொழிலில் மட்டும் உயிரிழப்பு வெளியில் தெரிகிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் உயிரிழப்பை தடுக்க விரைவான நடவடிக்கை எடுத்துள்ளார். நிவாரணமும் அறிவித்துள்ளார்.

பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க.வினர் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் இந்த தொழிலை நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர எண்ணற்ற நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

பட்டாசு தொழிலாளர் நலச்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்துகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக தொழிலை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

தாய் தந்தையை இழந்த நடுசூரங்குடி நந்தினிக்கு தேவையான படிப்பு செலவினை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கென தனி கவனம் செலுத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாக நாங்கள் கவனித்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News