செய்திகள்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 47), ரியல் எஸ்டேட் அதிபர். இவரை, மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2017-ம் ஆண்டு திருவண்ணாமலை அ.தி.மு.க. பிரமுகர் கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்கு பழியாக கூலிப்படையை ஏவி கனகராஜின் மனைவி, மாமியார் உள்பட உறவினர்கள் சிலர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 6 பேர் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (39) என்பவரை நேற்று திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.