செய்திகள்
சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் செய்த போது எடுத்த படம்.

சாத்தூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2021-02-11 18:41 IST   |   Update On 2021-02-11 18:41:00 IST
சாத்தூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாத்தூர்:

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று 2-வது நாளாக சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

போராட்டத்தில் அழகுராணி, சீதா, நந்தினி, முனீஸ்வரி, கருப்பசாமி ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

தெலுங்கானா, புதுச்சேரி போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கேயே சமைத்து, அலுவலக வாசலில் தூங்கினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வெம்பக்கோட்டையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் திருமலை ராஜா முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முனியசாமி, கிளைச்செயலாளர் பெருமாள் ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது எனவும், 17-ந் தேதிக்கு பிறகு போராட்டத்தை தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

சேத்தூர் மேட்டுப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News