செய்திகள்
ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

குப்பைகளை தரம் பிரிக்க வசதியாக உபகரணங்கள் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Published On 2021-02-11 18:33 IST   |   Update On 2021-02-11 18:33:00 IST
ஊட்டியில் குப்பைகளை தரம் பிரிக்க வசதியாக உபகரணங்கள் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேகர், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களாகிய எங்களுக்கு தூய்மை பணியில் ஈடுபட கூடை, துடைப்பம், மண்வெட்டி, கொத்து போன்ற உபகரணங்கள் வழங்கவில்லை.

குப்பைகளை 4 விதமாக பிரித்து எடுக்க ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 4 சாக்குப்பை தேவைப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கூறியும் கிடைக்கவில்லை. உரிய உபகரணங்கள் இல்லாததால் பணி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே உபகரணங்களை வழங்க வேண்டும். மாத சம்பளம் 20-ந் தேதி முதல் 25-ந் தேதிக்குள் கிடைக்கிறது. இதனால் சிரமப்பட்டு வருகிறோம். 1-ந் தேதி முதல் 5-ந் தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து சங்க தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

நாங்கள் பலமுறை கோரிக்கைகளை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டம் நடத்துவதாக கூறினால் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்து தருகிறேன் என்று சொல்வதால் போராட்டத்தை திரும்ப பெற்றோம். ஆனால் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டோம்.

கடந்த 2006-ம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்த பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அரியர் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிடைக்கவில்லை. நகராட்சியில் பணிபுரிந்து இறந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஓராண்டு ஆகியும் பணப்பலன் வழங்கப்படவில்லை. வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலையும் கிடைக்கவில்லை. இதை உடனே வழங்க ஆவன செய்ய வேண்டும்.

ஓய்வுபெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வருங்கால வைப்பு தொகை, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு, ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 1,500 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம் என்றார்.

Similar News