செய்திகள்
ஊசிமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் பையில் உள்ள உணவை குரங்குகள் தின்னும் காட்சி

பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது - சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை

Published On 2021-02-11 11:34 GMT   |   Update On 2021-02-11 11:34 GMT
விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துஉள்ளனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்தது ஆகும். இங்குள்ள அடர்ந்த வனங்களில் காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் வனவிலங்குகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களும் அதிகளவில் வனப்பகுதியில் வீசப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு பொருட்களோடு பிளாஸ்டிக் பொருட்களையும் தின்னும் அவல நிலையை காண முடிகிறது. இதனால் அவற்றின் உடல் நலன் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை வனம் மற்றும் பொது இடங்களில் வீசக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களால் வனவிலங்குகளின் உடல் நலன் பாதிக்கப்படும். எனவே அதனை ஒழிக்க சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் எச்சரிக்கையுடன் கூறினர்.

Tags:    

Similar News