செய்திகள்
விருதுநகர் அருகே வள்ளியூரில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

விருதுநகர் யூனியனில் 3 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

Published On 2021-02-10 13:59 GMT   |   Update On 2021-02-10 13:59 GMT
விருதுநகர் யூனியனில் 3 கிராமங்களில் அம்மா மினிகிளினிக்குகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
விருதுநகர்:

விருதுநகர் யூனியனில் உள்ள வள்ளியூர், சத்திரரெட்டியபட்டி, இனாம் காசி ரெட்டியபட்டி ஆகிய 3 கிராமங்களில் முதல்-அமைச்சரின் அம்மா மினிகிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாக்களில் கலந்து கொண்டு கிளினிக்குகளை திறந்து வைத்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடைக்கோடி மக்களுக்கும் தரமான சுகாதார சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் அவற்றின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதியிலேயே சிகிச்சை கிடைக்கக் கூடிய அளவிற்கு தமிழகம் முழுவதும் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 அம்மா மினிகிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்க ஏற்பாடு செய்துள்ளார். இம்மாவட்டத்தில் 3 கட்டங்களாக 47 அம்மா மினிகிளினிக்குகள் சிறப்பான முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்பட்டுவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

6 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 9கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நிதி உதவியையும் அமைச்சர் வழங்கினார்.

இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனிசாமி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர்எஸ்.ஆர். விஜயகுமரன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், விருதுநகர் யூனியன் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா, ஒன்றியச்செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், ராஜசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் தவசிலிங்கசாமி கோவில் அருகே ரூ.81 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை யில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு திட்ட பணியை தொடங்கிவைத்தார். மேலும் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவரின்அலுவலகத்திற்கான புதுப்பிக்கப்பட்டகட்டிடத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்திமான்ராஜ் தலைமையிலும், கலெக்டர்கண்ணன் முன்னிலையிலும் அமைச்சர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News