செய்திகள்
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதுஎடுத்த படம்

நாகப்பட்டினம் அருகே விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-10 16:11 IST   |   Update On 2021-02-10 16:11:00 IST
நாகப்பட்டினம் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தமீம்அன்சாரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலையை 200 நாட்களாக மத்திய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். அடித்தட்டில் வாழும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு 400 சதுர அடியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் விவசாய சங்க செயலாளர் தங்கையன், தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சரோஜா, ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Similar News