செய்திகள்
ரப்பர் அரிசி (கோப்பு படம்)

விருதுநகர் சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை?- பொதுமக்கள் புகார்

Published On 2021-02-09 15:33 IST   |   Update On 2021-02-09 15:33:00 IST
விருதுநகர் சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் நகராட்சி சாலையில் தனியார் பார் நடத்துபவர் பிச்சைமணி. இவர் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவு வழங்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் வயிற்றுப் போக்குக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் அங்குள்ள சமையலர் உணவுக்கு பயன்படுத்தும் அரிசி வேக 1½ மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. மேலும் அந்த சாதத்தை உருண்டையாக பிடித்து தரையில் வீசினார், அது உதிர்வதில்லை என தெரிவித்துள்ளார்.

அந்த அரிசி சாதத்தை மருத்துவரிடம் காண்பித்தபோது இதனால்தான் ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பிச்சைமணி, மக்கள் நீதிமய்ய மத்திய மாவட்ட செயலாளர் காளிதாசிடம் தெரிவித்தார். அவர் அரிசியை ஆய்வு செய்து உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மனு அனுப்பினார்.

ஏற்கனவே சீனாவில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டிற்கு வந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அதுபோல தற்போது விருதுநகர் சந்தையில் ரப்பர் அரிசி பயன்பாட்டில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வராஜனிடம் கேட்ட போது, தமிழகத்தில் பிளாஸ்டிக், ரப்பர் அரிசி பயன்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பொதுமக்கள் புகாரை தொடர்ந்து விருதுநகர் சந்தைகளில் இந்த வகை அரிசி உள்ளதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News