செய்திகள்
கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது
கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே கோகூர் வெட்டாறு கரை பகுதியில் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கீழ்வேளுர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது கோகூர் வெட்டாற்றில் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்த 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர்.
மற்ற 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கோகூர் மெயின்ரோட்டை சேர்ந்த அன்பழகன் (வயது45) என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கோகூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு மகன் இளையராஜா, ஆணைமங்கலம் மஞ்சவாடி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் அற்புதராஜ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.