செய்திகள்
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி 3-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் - பெண்கள் உள்பட 60 பேர் கைது

Published On 2021-02-05 14:02 GMT   |   Update On 2021-02-05 14:02 GMT
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில் 3-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் 3-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் புகழேந்தி, அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத்துறையில் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். அரசுத்துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்.

தமிழக அரசு பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போனசாக உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும். எ.,பி. பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக, 40 பெண்கள் உட்பட 60 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Tags:    

Similar News