செய்திகள்
கொள்ளை

மயிலாடுதுறை அருகே நகை-பணம் கொள்ளை

Published On 2021-02-03 17:19 IST   |   Update On 2021-02-03 17:19:00 IST
மயிலாடுதுறை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள்-ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் லிடியாள் ஞானசிரோன்மணி(வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து லிடியாள் ஞானசிரோன்மணி அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்தார். அங்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்ளது.

மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இந்த கொள்ளை தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக லிடியாள் ஞான சிரோன்மணி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News