செய்திகள்
மணிமேகலை (பழைய படம்)

மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை- 2 பேர் கைது

Published On 2021-02-01 18:18 IST   |   Update On 2021-02-01 18:18:00 IST
மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் மகள் மணிமேகலை (வயது 19). இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது குடும்பத்தினருக்கும் வேலி தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மணிமேகலை மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் வாசலில் வந்து பன்னீர்செல்வத்தின் மகன்கள் கார்த்திக், ரஜினிகாந்த் ஆகிய 2 பேரும் சேர்ந்து மணிமேகலை குடும்பத்தினரை திட்டியதோடு ஆபாசமாகவும் பேசி உள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மணிமேகலை தனது சகோதரர்களுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில், தன்னை கார்த்திக்கும், ரஜினிகாந்தும் ஆபாசமாக பேசி விட்டார்கள். இனி நான் உயிரோடு இருக்க மாட்டேன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனவே அம்மா, அப்பாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேசிய ஆடியோவை பதிவிட்டு விட்டு சேலையால் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியே கடைக்குச் சென்று விட்டு திரும்பிய மணிமேகலையின் தாய் ராதிகா வீட்டிற்குள் சென்றபோது தூக்குப்போட்டு மணிமேகலை தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதார். ராதிகாவின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மணிமேகலையின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிமேகலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராதிகா (50) கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பன்னீர்செல்வம் மகன்கள் கார்த்திக் (37), ரஜினிகாந்த் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News