செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் நடந்த பா.ம.க. ஊர்வலத்தில் லாரி கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

Published On 2021-01-31 12:43 GMT   |   Update On 2021-01-31 12:43 GMT
மயிலாடுதுறையில் நடந்த பா.ம.க. ஊர்வலத்தில் லாரி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதனையொட்டி திருவிழந்தூர் தென்னை மரச்சாலையில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றனர்.

அப்போது ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை என போலீசார் பா.ம.க.வினரிடம் அறிவுறுத்தினர். ஆனாலும் போலீசாரின் தடுப்புகளை அப்புறப்படுத்தி விட்டு பா.ம.க.வினர் ஊர்வலம் நடத்தினர். போலீசார் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்ட போது குறுக்கே லாரி ஒன்றும் நின்றது. அந்த லாரியை அப்புறப்படுத்தக்கோரி பா.ம.க.வினர் லாரியை கைகளால் அடித்து தட்டினர். அப்போது லாரியின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை கூரைநாட்டை சேர்ந்த லாரி டிரைவான சார்லஸ் (வயது 60) என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றதாகவும், அப்போது ஊர்வலமாக வந்த பா.ம.க.வினர் தனது லாரியின் கண்ணாடியை உடைத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ம.க.பிரமுகர் மயிலாடுதுறை அருகே கடுவங்குடி, விராலூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் கோவிந்தன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News