செய்திகள்
தீவிபத்து (கோப்புப்படம்)

சித்தோட்டில் கால்மிதியடி தயாரிக்கும் நிறுவனத்தில் தீவிபத்து

Published On 2021-01-30 13:00 IST   |   Update On 2021-01-30 13:00:00 IST
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் கால்மிதியடி தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
சித்தோடு:

ஈரோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சித்தோடு பச்சப்பாளி வசுவப்பட்டி என்ற கிராமத்தில் கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம், பழைய துணிகளை மறுசுழற்சி செய்து பஞ்சாக மாற்றும் கம்பெனி ஆகியவை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் பகல் நேரத்தில் மட்டும் ஊழியர்கள் வேலைப்பார்ப்பார்கள். இரவில் யாரும் இருக்க மாட்டார்கள். வழக்கம் போல் நேற்று பணி முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த கம்பெனியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

தீயணைப்பு துறையினரின் முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. பகல் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News