செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

29ந் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2021-01-25 08:24 GMT   |   Update On 2021-01-25 08:24 GMT
வருகிற 29-ந் தேதி முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் சந்திப்பை தொடங்க இருப்பதாகவும், அன்று திருவண்ணாமலை தொகுதி மக்களை சந்திப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

ஏற்கனவே ‘‘ஒன்றிணைவோம் வா’’, ‘‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’’ ஆகிய தலைப்புகளில் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 21 ஆயிரம் இடங்களில் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தினர். இதன்மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை தி.மு.க. சந்தித்தது. அடுத்தகட்டமாக புதிய கோணத்தில் ஒரு பிரசார வியூகத்தை மு.க.ஸ்டாலின் வகுத்துள்ளார்.

இந்த புதிய பிரசார திட்டம் பற்றி கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தின் முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 11 மணிக்கு அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகி உள்ளனர். அ.தி.மு.க. அரசின் ஊழல், திறமையின்மை மற்றும் அநீதிகளுக்கு மக்கள் பலிகடா ஆகிவருகின்றனர்.

இது போதாதென்று, கொரோனோ பெருந்தொற்றும் விவசாயிகள், தினக்கூலிப் பணியாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறக்கூட எந்த ஒரு வழியும் இல்லாமல், 10 ஆண்டுகளாக தங்கள் அடிப்படை தேவைகளையே நிறைவேற்றாத அரசின் மீது சாமானிய மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சி மக்களை அலட்சியம் செய்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை எளியோருக்கும் உதவுவதிலும், எளியோரின் குரலை ஓங்கி ஒலிப்பதிலும் தி.மு.க. என்றுமே தவறியதில்லை. முன்னணியில் நின்று மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. தேவைப்படுகிறவர்களுக்கு உதவியும் வருகிறது.

‘ஒன்றிணைவோம் வா’ தொடங்கி, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘மக்கள் கிராமசபை கூட்டங்கள்’ வரை தி.மு.க.வினர் தொடர்ந்து தமிழக மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி தங்களது பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க தி.மு.க.வால்தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் தி.மு.க.வினரிடம் அளித்து வருகின்றனர்.

இச்சூழலில்தான், மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு என்ற உறுதி மொழியை தமிழக மக்களுக்கு அளிக்கிறேன்.

முதல் 100 நாட்களில் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். அவர்கள் துன்பங்களில் இருந்தும், துயரங்களில் இருந்தும் மீட்கப்படுவார்கள். இது அண்ணா, கலைஞர், தமிழக மக்கள் மீது ஆணை. சொல்வதை செய்வான், செய்வதை தான் சொல்வான் மு.க.ஸ்டாலின்.

இந்த உறுதிமொழியை மக்களுக்கு நேரில் அளிக்கும் பொருட்டு வருகிற 29-ந் தேதி முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் சந்திப்பை நான் தொடங்க இருக்கிறேன். 29-ந்தேதி காலை 8 மணிக்கு திருவண்ணாமலை தொகுதி மக்களையும், மதியம் 1 மணிக்கு ஆரணி தொகுதி மக்களையும் சந்திக்கிறேன்.

அடுத்த 30 நாட்களில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த உள்ளேன். இந்த கூட்டங்களில் அந்தந்த தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பிரச்சினைகளை மனுவாக எழுதிதரலாம்.

இந்த மனுக்கள் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு வருக்கும் தனித்தனி பதிவு எண்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டும் வழங்கப்படும்.

நான் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடுவேன். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் பாது காப்பாக சீல் வைக்கப்படும்.

இக்கூட்டங்களில் நேரடியாக கலந்து கொள்ள இயலாதோர், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ, பிரத்தியேக இணைய தளம் (www.stalinani.com) வாயிலாகவோ, 9171091710 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ, தங்கள் பிரச்சினைகளைப் பதிவு செய்யலாம்.

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளித்தல் போன்ற நடைமுறைகளும் தொடரும். நாங்கள் முன்னெடுத்து இருக்கும் இந்த பணி தனியாக நிறைவேற்றப்படும்.

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருகிற 30-ந்தேதி காலை 8 மணிக்கு வேலூர், 31-ந் தேதி காலை 8 மணிக்கு பூந்தமல்லி, மதியம் 1 மணிக்கு சோளிங்கர், பிப்ரவரி 1-ந்தேதி காலை 8 மணிக்கு கிருஷ்ணகிரி, மதியம் 1 மணிக்கு தர்மபுரி ஆகிய தொகுதிகளில் மு.க. ஸ்டாலின் மனுக்களை பெறுகிறார்.

Tags:    

Similar News