செய்திகள்
இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட 40 மீனவர்கள் சென்னை விமானநிலையம் வந்திறங்கிய காட்சி.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை

Published On 2021-01-19 21:29 GMT   |   Update On 2021-01-19 21:29 GMT
இலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்னை திரும்பினர்.
ஆலந்தூர்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்களான ஜெபர்சன், ஜோசப், அப்துல் கலாம், அசோக்குமார், முருகன், அந்தோணி உள்பட 29 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் உள்ளிட்ட 33 பேர் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், சூசை மைக்கேல், முனியசாமி உள்பட 7 மீனவர்களை கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி இலங்கை கடற்படையினர் பிடித்தனர்.

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்களை மீட்டனர்.

அதைத்தொடர்ந்து, 1 மாதத்துக்கு முன்பு சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்ட 40 மீனவர்கள் நேற்று சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களை தமிழக மீனவளத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ஜூலியஸ் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதிகளை அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து தந்தனர்.

அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர் கான்ஸ்டன் நிருபர்களிடம் கூறும்போது,

இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து அடித்து துன்புறுத்தியதாகவும், அவர்களிடம் பிடிபட்ட சுமார் 250 படகுகளை மத்திய, மாநில அரசுகள் தலையீட்டு மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் தங்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News